2003-ம் ஆண்டு அமெரிக்க நீச்சல் உலகின் புதிய விடிவெள்ளியாக 'மைக்கேல் பெல்ப்ஸ்’ உதித்திருந்த சமயம். ஆறு வயது சிறுமியான கேட்டி லெடக்கி, அப்போதுதான் நீச்சலில் 'அகர முதல...’ கற்கத் தொடங்கியிருந்தாள். அவளுக்கு பெல்ப்ஸைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. குதூகலப் புன்னகையுடன் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டாள்.
2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம். அமெரிக்க அளவில் நடந்துகொண்டிருந்த நீச்சல் போட்டி ஒன்றின் 400 மீட்டர் தகுதிச் சுற்றை, 4 நிமிடம் 2 நொடி, 67 மில்லிநொடியில் கடந்தார் பெல்ப்ஸ். சிறிது நேரம் கழித்து நடந்த 400 மீ பெண்கள் தகுதிச் சுற்றுப் போட்டியில், அதே 04:02:67 கால அளவில் கடந்து கரையேறினார் கேட்டி. பெல்ப்ஸ், புன்னகையுடன் கேட்டியிடம் சென்றார்.
'நம்ம ரெண்டு பேருக்கும் போட்டி வெச்சுக்கலாமா?’
'கண்டிப்பா. ஒரு மணி நேரம் கழிச்சு வெச்சுக்கலாம்.’
'இல்லல்ல. இப்போதான் நீ நீச்சலடிச்சுட்டு வந்து களைப்பா இருக்க. இப்பவே போட்டி வெச்சுக்கிட்டாதான், நான் ஜெயிக்க முடியும்.’
நீச்சல் உலகின் ஈடுஇணையற்ற ஹீரோ பெல்ப்ஸ் பட்டெனச் சிரிக்க, 18 வயது கேட்டியின் முகத்தில் அத்தனை சந்தோஷம். மூன்றே ஆண்டுகளில் நீச்சல் உலகின் முடிசூடா ராணியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் கேட்டியை, உலகமே இன்னும் ஆச்சர்யம் விலகாமல்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேட்டியின் நீச்சல் ராஜ்ஜியத்தை யாராலும் அசைத்துப்பார்க்கவே முடியாது என பெட் கட்டுகிறார்கள் நீச்சல் நிபுணர்கள். அப்படி என்னதான் சாதித்திருக்கிறாள் இந்தச் சின்னப் பெண்?