Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Friday, October 14, 2016

கஷ்டங்கள் தீர... கந்தனுக்குக் கடிதம்!

கஷ்டங்கள் நீங்க கந்தனுக்குக் கடிதம்

இந்தக் கோயிலில் தனிச் சிறப்பான வழிபாடு ஒன்று நடக்கிறது. திருமணத் தடை, குழந்தைபாக்கியம் இல்லாத குறை, வழக்குகளில் சிக்கல், வீடு கட்ட, தொழில் தொடங்க, வேலை கிடைக்க என்று பிரச்னைகளால் துன்பப்படும் பக்தர்கள், அதை விண்ணப்பக் கடிதமாக எழுதி, ஸ்ரீகொளஞ்சியப்பர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். பிறகு அந்தக் கடிதத்தை முனியப்பர் சந்நிதிக்கு எதிரில் உள்ள வேலில் கட்டிவிடுகிறார்கள். இப்படிச் செய்த 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களுக்குள் தங்கள் வேண்டுதலை ஸ்ரீகொளஞ்சியப்பர் நிறைவேற்றி அருள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


சுயம்புவாகத் தோன்றிய கொளஞ்சியப்பர்

தந்தைக்குப் பிரணவப் பொருள் உரைத்து தகப்பன் சாமி என்று போற்றப்பெறும் அழகு முருகன், தந்தை சிவலிங்க வடிவில் அருவுருவமாகக் காட்சி தருவது போலவே தானும் அருவுருவமாகக் கோயில் கொண்ட திருத்தலம் மணவாள நல்லூர். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் கொளஞ்சி மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. அருகில் இருந்த விருத்தாசலத்தில் இருந்து சில சிறுவர்கள் இந்தப் பகுதிக்கு பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவது வழக்கம். மேய்ச்சலுக்கு வரும் மாடுகளில் ஒரு பசு மட்டும் வந்த வேலையை மறந்து, மந்தையை விட்டு விலகி ஒரு புதருக்குள் சென்று சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டு வருவதை பலநாட்களாக கவனித்த சிறுவர்கள் புதருக்குள் சென்று பார்த்தார்கள். அங்கே அந்தப் பசு புதருக்குள் இருந்த ஒரு கருங்கல் பீடத்துக்குத் தானாகவே பால் சொரிந்து அபிஷேகம் செய்ததாம். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் விவரம் சொன்னார்கள். பின்னர் அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றிய இறைவனுக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினார்கள். கொளஞ்சி வனத்தில் சுயம்புவாகத் தோன்றிய இறைவன் ஸ்ரீகொளஞ்சியப்பர் என்னும் திருப்பெயர் கொண்டார். காலப்போக்கில் ஆலயத்தின் அருகிலேயே வீடுகள் கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினர். இப்படித்தான் மணவாளநல்லூர் கிராமம் தோன்றியது.


பரிவார தெய்வங்கள்

கொளஞ்சிவனத்தில் சுயம்புவாகத் தோன்றிய கொளஞ்சியப்பர் ஆலயத்தில் பரிவார மூர்த்திகளாக முனியப்பர், வீரனார், இடும்பன் ஆகியோர் சந்நிதி கொண்டு இருக்கின்றனர். முனியப்பர் சந்நிதிக்கு எதிரில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.


வேடுவனாக வந்த வேலவன்

ஒவ்வொரு தலமாக இறைவனை வழிபட்டு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், விருத்தாசலம் வந்தபோது, ‘இதுவோ முதுகுன்றம்! பழமலை! அம்மையோ முதுமையான விருத்தாம்பிகை; இறைவனோ பழமலைநாதர்! ஊரும் கிழம்; இறைவன் இறைவியும் கிழம்! இவர்களைப் பாடாவிட்டால்தான் என்ன’ என்று பாடாமல் சென்றுவிட்டார்.

தன் தந்தையை அலட்சியப்படுத்திய சுந்தரருக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினார் முருகப் பெருமான். அதற்காக ‘பழமலைநாதர்’ திருக்கோயிலின் எல்லையை சுந்தரர்  தாண்டக்கூடாது என்று தெற்கே ‘வேடப்பர்’, மேற்கே ‘கொளஞ்சியப்பர்’, வடக்கே ‘வெண்மலையப்பர்’, கிழக்கே ‘கரும்பாயிரப்பர்’ என்று நான்கு திசைகளிலும் காவலாக நின்றார் முருகன். அப்போது, மேற்கு திசையை நோக்கி வந்த சுந்தரருக்கு எதிரே வேடுவ குமரனாகத் தோன்றினார். சுந்தரரை வழிமறித்து பொன்னையும் பொருளையும் பறித்துக்கொண்டு, “பழமலைநாதரைப் பாடிவிட்டு உன் பொருட்களைப் பெற்றுக்கொள்” என்று கூறிவிட்டார். தன் பிழைக்கு வருந்திய சுந்தரர் அதன் பின் பழமலைநாதரைப் போற்றிப் பாடினார்.


பிணி தீர்க்கும் வேப்ப எண்ணெய் பிரசாதம்

கை கால்களில் வலி, காயம் மற்றும் பலதரப்பட்ட தோல் சம்பந்தமான நோய்களால் கஷ்டப்படும் பக்தர்கள், ஸ்ரீகொளஞ்சியப்பர் சந்நிதியில் வேப்ப எண்ணெயை வைத்து அர்ச்சனை செய்து பிரசாதமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். பின்னர் அந்த எண்ணெயை அறுகம்புல்லால் தொட்டு பிரச்னை உள்ள இடத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைத்துவிடுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.


எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது..?

விருத்தாசலத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது. வேப்பூர் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கொளஞ்சியப்பர் திருக்கோயில் வழியாகச் செல்லும்.

Monday, October 10, 2016

ஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை- விஜயதசமி- சாமி கும்பிட நல்ல நேரங்கள்

Image result for ஆயுத பூஜை

நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த பூஜைகள் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரங்களை ஜோதிடர்கள் குறித்துள்ளனர். ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள். அதற்கேற்ப நேரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

ஆயுதபூஜைக்கு ஏற்ற நேரம்

இந்த வருடம் புரட்டாசி இருபத்து நான்காம் தேதி 10-10-2016 திங்கள் கிழமை அன்று ஆயுத பூஜை -சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம் பகல் 12-00 மணி முதல் 02-00 மணிக்குள் மற்றும் மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை பூஜை செய்வதற்கு சிறந்த நேரமாகும். இன்றைய தினம் தங்கள் தொழில் சம்பந்தமான ஒரு புதிய புத்தகம் வாங்கி பூஜை செய்வது சிறப்பு இதனால் சரஸ்வதி கடாட்சம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

விஜயதசமி பூஜை

ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால் அந்த வருடம் முழுவதும் தொழில் நிலை சிறப்படைந்து நன்றாக செல்வச் செழிப்பு உண்டாகும். தசமி திதியும் திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷம் இந்த வருடம் அந்த சிறப்பு நிகழ்கிறது. ஏதேனும் ஒரு புதிய செயலை இன்று துவக்குவது சிறப்பு. நல்ல நேரம் இந்த நாளில் நாம் துவங்கும் செயல் மிகவும் எதிர்காலத்தில் விருத்தியாகும். விஜய தசமி அன்று மறு பூஜை செய்வதற்கு சிறந்த நேரம் காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரையிலும் பகல் 12-00 மணி முதல் 01-00 வரையிலும் செய்வது நன்மை விளையும்.

Saturday, October 1, 2016

நவகிரக வழிபாடு - எளிய பரிகாரங்களுடன்...

ம் ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந் திருக்கும். யாருக்குமே ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. சில கிரகங்கள் பலமாகவும், சில கிரகங்கள் பலவீனமாகவும் அமைந்திருக்கும்.

Friday, September 23, 2016

புரட்டாசி விரதங்கள்... இரட்டிப்பு பலன்கள்!

 

தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர் களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புத மான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர். ஆமாம், பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை.

அம்பாளுக்கு உகந்த- சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதார கெளரி விரதம், பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய புண்ணிய தினங் களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.

மேலும், முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளயபட்சம் வருவதும் இம்மாதத்தில்தான். ஆகவேதான், புரட்டாசி வழிபாடுகள் இரட்டிப்பு பலன் தரும் எனச் சொல்லிவைத்தார்கள் பெரியோர்கள். மகத்துவமான அந்த விரத வழிபாடுகளை நாமும் விரிவாக அறிவோமா?

கருடசேவையும் முன்னோர் ஆசியும் புரட்டாசியில் எண்ணற்ற கோயில்களில் பிரம்மோற்ஸவம் நிகழும். அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது. வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள் நம் பெரியவர்கள். அந்த வைபவத் தில் மற்ற ஸேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும். ஏன் தெரியுமா?

செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும் ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட ஸேவையைத் தரிசிக்க திரள்வார்கள் என்கின்றன புராணங்கள்.  அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம். அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக மாந்தர்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினாராம் கருடன்.

அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர். அவர்களை தியானிப் பதுடன், அவர்களின் விமோசனத்துக்காகவும் ஸ்வாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்’ என்பது ஐதீகம்.இன்றைக்கும், கருடஸேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு. இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். வரும் அக்டோபர் 3-ம் தேதி, திருமலை திருப்பதியில் பிரம்மோற்ஸவம் துவங்குகிறது. அக்டோபர் 7 அன்று கருடஸேவை நடைபெறும். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டா சியில், திருப்பதிக்குச் சென்று பிரம்மோஸ்வத்தில் கலந்துகொள்வதுடன், கருடசேவையையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.

கேதாரீஸ்வர விரதம்

பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர். ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்க, பிருங்கி முனிவரோ வண்டாக வடிவெடுத்து, ஸ்வாமியை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் தேக ஆற்றலை நீங்கச் செய்தாள். அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து திருவருள் புரிந்தார்.

இதையடுத்து, தான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய அம்பிகை, அதன் பொருட்டு பெரும் தவம் செய்ய முடிவெடுத்து பூமிக்கு வந்தாள். வனம் ஒன்றில் கெளதம மஹரிஷியைச் சந்தித்தாள். அவரிடம் நடந்த யாவற்றையும், தனது விருப்பத்தையும் விவரித்து, விருப்பம் நிறைவேற வழிகேட்டாள். அவளுக்கு கேதாரீஸ்வர விரத மகிமையை எடுத்துக் கூறிய கெளதமர், அந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவனாரை வழிபடும்படி கூறினார். அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.

அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ் வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும். சரி! இந்த விரதத்தை எப்போது கடைப்பிடிப்பது?

இதுகுறித்து கெளதமுனிவர் உமையவளுக்குக் கூறிய விவரம்: ‘‘புரட்டாசி மாத வளர் பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை நடத்த வேண்டும். சிவபெருமானைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதத்தை பக்தியுடன் செய்தால், ரிஷப வாகனனான ஸ்வாமி காட்சி தருவார். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!” என்றார்.


வழிமுறை: பூஜை செய்ய வேண்டிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தலை வாழையிலையில் அட்சதையைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் பூரண கும்பத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும். கும்பத்தில் கேதாரீஸ் வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

21 இழைகள் - 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வேத வல்லுநர்கள் 21 பேரை வரவழைத்து, அவர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும். மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் விரதம் இது.

புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண் டிய இன்னும் சில விரதங்களைத் தெரிந்துகொள்வோமா?

ஸித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.

சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.

அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம்
: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.


மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.

அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.

 

முன்னோர்கள் அருளும் மஹாளயம்

புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய அமாவாசை எனப்படும். இந்த காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ, அதை தானம் அளிக்கலாம். தானம் பெறுபவர்களுக்கு தாம்பூலமும் தட்சிணையும் கண்டிப்பாக தருதல் வேண்டும். தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.

அதேபோல், வாய்ப்பு இருப்பவர்கள், கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே ப்ரசித்தி பெற்ற தலங்களில், அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.

Monday, September 12, 2016

கதை கதையாம் கணபதியாம்!

சரணம் கணேசா

கோகுலத்துக் கண்ணன் போலவே கயிலை கணபதியும்  பல தருணங்களில் பல இடங்களில் எண்ணற்ற அற்புத லீலைகளை நிகழ்த்தியிருக்கிறார். விநாயக சதுர்த்தி புண்ணிய தினத்தில் அந்த லீலைகளை- கணபதி குறித்த திருக்கதைகளைப் படிப்பதால், சகல சுபிட்சங்களும் கைகூடும்.
மூஷிக வாகனம் வந்த கதை!
அற்புதமான இந்தக் கதை கந்தபுராணத்தில் உள்ளது.
மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப் பெண்ணுக்கும் தோன்றிய அசுரன் கஜமுகன். அவன் அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சார்யரின் உபதேசத்தின்படி சிவபெருமானை எண்ணி தவம் இயற்றி, ஆயுதங்களால் அழிக்கமுடியாத வரத்தைப் பெற்றான். தனது வரத்தின் பலத்தினால் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். திக்கற்றவர்க்கு தெய்வம்தானே துணை. இந்திரனும் திருக்கயிலைக்குச் சென்று பிள்ளையார் பெருமானிடம் முறையிட்டான். அவர்களது துன்பங்களைத் தீர்க்க திருவுளம் கொண்டார் விநாயகர்.
ஆகவே, கணங்களும் படை பரிவாரங்களும் சூழ, கஜமுகாசுரனுடன் போருக்குச் சென்றார். அசுரன் பல அஸ்திரங்களை விநாயகர் மீது ஏவினான். அவற்றை எல்லாம் தன் திருக்கரத்தில் இருந்த உலக்கையால் முறியடித்து வீழ்த்தியபடி, அசுரனை நெருங்கிய விநாயகர், அதே உலக்கையால் அவனது மார்பில் ஓங்கி அடித்தார்.
ஆனாலும் அசுரன் மயங்கத்தான் செய்தானே தவிர, மடியவில்லை. ஆயுதத் தால் அவனை அழிக்க முடியாது என்பதை உணர்ந்த விநாயகர் தன் தந்தத்தை உடைத்து, அவன் மீது ஏவினார். அசுரனோ, பெருச்சாளியாக உருவம் கொண்டு வந்தான். விநாயகர் அவனை ஆட்கொண்டு, தம் வாகனமாக அமர்த்திக் கொண்டார்.
அறுகம்புல்லுக்கு இணையேது?
பெரும் தவசீலரான கெளண்டின்ய மஹரிஷி, நாள்தோறும் விநாயகரை பூஜிப்பவர். அத்துடன், தன் மனைவியான ஆசிரியைக்கு அறுகம்புல்லின் பெருமையை விரிவாக விளக்கியிருந்தார். மிதிலாபுரி எனும் ஊரில் வசித்த திரிசுரன் எனும் அந்தணன், அறுகம்புல்லால் விநாயகரை வழிபட்டு அருள்பெற்ற சம்பவத்தையும் அவளிடம் கூறியிருந்தார்.
ஒருநாள் ஆசிரியை தன் கணவரிடம், “ஸ்வாமி, மிதிலாபுரி திரிசுரனை விடவும் அளவற்ற அறுகம்புற்களால் அனுதினமும் ஆனைமுகனை நாம் வழிபடுகிறோம். எனினும் நமக்கு நற்பேறு வாய்க்கவில்லையே’’ என்று குறைபட்டுக்கொண்டாள். அவளுக்கு  மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகுக்கும் அறுகம்புல்லின் மகிமையை உணர்த்த விரும்பினார் கெளண்டின்யர். ஆகவே, விநாயகருக்கு அர்ச்சிக்கப்பட்ட ஓர் அறுகம்புல்லை அவளிடம் கொடுத்து, ‘‘இதை தேவேந்திரனிடம் கொடுத்து, இதன் எடைக்கு எடை பொன் பெற்று வா’’ என்று பணித்தார்.

அவளும் அவ்வண்ணமே தேவேந்திரனிடம் சென்று, தன் கணவரின் செய்தியை அவனிடம் கூறியதோடு, அறுகம்புல்லை தந்து அதன் எடைக்குச் சமமாக பொன் தரும்படி கேட்டாள். தகுந்த மரியாதையுடன் அவளை வணங்கித் தொழுத தேவேந்திரன், குபேரனிடம் சென்று இதற்கு இணையாக பொன் பொருளை பெற்றுக் கொள்ளும்படி அனுப்பிவைத்தான். அவள் குபேரனைச் சந்தித்தாள். அவன் மலை போன்ற ஒரு பொற்குவியலைக் காட்டி, தேவையானதை எடுத்துச் செல்லும்படி கூறினான். ஆனால், ஆசிரியையோ, ‘‘இந்த அறுகுக்கு இணையான பொன் தந்தால் போதும். ஆகவே, இதை ஒரு தராசுத் தட்டில் வைத்து, தக்க அளவில் பொன் தரவேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டாள்.
குபேரனும் அதற்கு இசைந்து, ஒரு தராசைக்கொண்டு வந்து அதன் தட்டு ஒன்றில் அறுகம்புல்லை வைத்து, மற்றொன்றில் ஒரு பொற்காசை வைத்தான். நிறை சமமாக வில்லை. அடுத்தடுத்து அந்தத் தட்டில் பொன்னை நிரப்பியபோதும் நிறை சமமாக வில்லை; அறுகு இருந்த தட்டு மேலெழும்ப வில்லை. குபேரன் தன் செல்வம் முழுவதையும் வைத்துப் பார்த்தும் பயன் இல்லை. பிறகு தன் குடும்பத்துடன் தானும் தட்டில் ஏறி நின்றான். அப்போதும் தராசுத் தட்டுகள் சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த குபேரனும் நிலைமையை உணர்ந்தான். அவன் முதலாக தேவர்கள் எல்லோரும் தட்டில் ஏறி நின்றார்கள். அப்போதும்  தராசுத் தட்டுகள் சமமாகவில்லை.
அப்போது, அங்கே ரிஷபாரூடராகக் காட்சியளித்த சிவபெருமான், ‘‘தேவர்களே! அறுகம் புல்லின் மகிமைக்கு இணை எதுவும் இல்லை.
ஆகவே, உங்கள் செல்வச் செருக்கை விட்டுவிட்டு தட்டில் இருந்து இறங்குங்கள். எல்லோரும் கெளண்டின்ய முனிவரிடமே செல்வோம்.’’ என்றார்.
அதன்படியே அனைவரும் முனி வரின் ஆசிரமத்துக்கு வந்தனர். அனைவரையும் வணங்கித் தொழுத முனிவர், ‘‘அறுகம்புல்லின் மகிமையை அனைவரும் அறியவேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன். என்னை மன்னித்தருள்க’’ என்று வேண்டிக் கொண்டார். சிவனாரையும் பணிந்து தொழுதார்.
உடனே சிவமூர்த்தி, ‘‘அருந்தவ முனிவரே! உமக்கும் அறுகம்புல் கொண்டு நீ நடத்தும் வழிபாட்டின் சிறப்புக்கும்  மூவுலகங்களும் ஈடாகாது. உமக்குச் சகல செல்வங்களும் கிடைக் கட்டும். உமது விநாயக வழிபாடு மிக உன்னதமானது. வாழ்க உமது புகழ்’’ என்று திருவருள் புரிந்தார்.  மற்ற தேவர்களும் முனிவருக்கு வரங்களை வாரி வழங்கினார்கள். அன்றுமுதல் காம தேனு, கற்பகத் தருவும் கூட அவருக்குப் பணிவிடை புரியத் துவங்கின.

இதையெல்லாம் கண்ட ஆசிரியை உள்ளம் நெகிழ்ந்தாள். ‘‘கணேச வழிபாட்டின் மகிமையையும் அறுகம் புல்லின் சிறப்பையும் பரிபூரணமாக அறிந்தேன்’’ என்று கூறி கணவரின் திருவடிகளை வணங்கி எழுந்தாள்.
இந்த திருக்கதையை படிப்பவர் களுக்கும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவர்களுக்கும், அதை செவிமடுக்கும் அன்பர்களுக்கும் சகல சம்பத்துகளும் ஸித்திக்கும். அவர்கள் வீட்டில் சுபிட்சங்களும் பெருகும்.
வன்னி இலையும் மந்தாரை பூக்களும்!
வன்னி இலையாலும் மந்தார மலராலும் விநாயகரை அர்ச்சித்து வழிபடுவதால், விசேஷ பலன்கள் கிடைக்கும். அதே போல், இந்த மரங்களின் கீழே அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயக மூர்த்தங்களைத் தரிசிப்பதும் சிறப்பு.
அப்படியென்ன சிறப்பு இந்த இரண்டு விருட்சங்களுக்கும்?
ஓளரவ முனிவர்-சுமேதை தம்பதியின் மகள் சமி. தெளமிய முனிவர் என்பவரின் மகன் மந்தாரன். இவன் செளனக முனிவரின் சீடனும்கூட. பெற்றோர் விருப்பப் படி சமிக்கும், மந்தாரனுக்கும் திருமணம் நடந்தேறியது.
ஒருமுறை சமியும், மந்தாரனும் தங்களின் உறைவிடத்துக்குப் போகும் வழியில், விநாயகரின் அருள்பெற்ற புருசுண்டி முனிவர் எதிர்ப்பட்டார். இவர்கள் இருவரும் அவரை வணங்கவில்லை. மாறாக, அவரின் உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடினர். ஆம்! புருசுண்டி முனிவர், விநாயகரைப் போன்றே யானை முகம் கொண்டவர். அவர், தன்னை சமி-மந்தாரன் தம்பதி ஏளனம் செய்வதைக் கண்டு கோபம் கொண்டு, மரங்களாக மாறும்படி அவர்களை சபித்தார்.தங்கள் தவறை உணர்ந்த கணவன், மனைவி இருவரும் சாப விமோசனம் அருளும்படி முனிவரிடம் வேண்டினர். ``விருட்சங்களாகத் திகழும் உங்கள் நிழலில் விநாயகர் குடிகொள்ளும்போது விமோசனம் கிடைக்கும்'' என்று கூறிச் சென்றார் முனிவர்.
சாபத்தின்படி மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் மாறினர். இந்த நிலையில் தங்களின் பிள்ளை களைக் காணாமல் தவித்த பெற்றோரும், மந்தாரனின் குருவான செளனகரும் அவர்களை எங்கெங்கோ தேடி அலைந்தனர். இறுதியில் ஞான திருஷ்டியின் மூலம் நடந்ததை அறிந்து வருந்தினர்.
செளனகர் அந்த மரங்களைக் கண்டடைந்தார். அவற்றின் கீழ் அமர்ந்து விநாயகரை எண்ணி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்தார். அதன் பலனாக விநாயகப் பெருமான் காட்சி தந்தார். அவரிடம், தன் மாணாக்கனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் அருளும்படி வேண்டினார் செளனகர்.
உடனே விநாயகர், ‘‘முனிவரே! அடியவர்கள் இட்ட சாபத்தை எவராலும் போக்க இயலாது. எனவே, இவ்விருவரும் விருட்சங்களாக இருந்தபடியே முக்தியை பெறுவார்கள். நாம் இம்மரங்களின் நிழலில் எழுந்தருள்வோம். வன்னி மற்றும் மந்தாரை மரங்களையும் அவற்றின் கீழ் இருக்கும் என்னையும் வழிபடுபவர்களுக்கு சகல இடர்களும் நீங்கும். அவர்களது விருப்பங்கள் யாவும் ஈடேறும். வன்னி இலையாலும் மந்தார மலர்களாலும் என்னை அர்ச்சித்து வழிபடுவோரும் இன்னல்கள் நீங்கி இன்பம் அடைவர்’’ என்று அருள்பாலித்தார். ஆகவே, வன்னி இலைகளும் மந்தார புஷ்பங்களும் பிள்ளை யாருக்கு உகந்தவை ஆயிற்று.
சிந்தை மகிழ வரம் தருவார் சிந்தாமணி விநாயகர்!
ருக்மாங்கதன் விதர்ப்ப தேசத்தின் அரசன். ஒருநாள், அவனைச் சந்தித்த குடிமக்கள் தங்களின் விளைநிலங்களை வன விலங்குகள் பாழ்படுத்துவதாக புகார் அளித்தனர். மன்னவனும் காட்டு விலங்குகளை வேட்டையாடப் புறப்பட்டான்.
காட்டில் படைபரிவாரங்களைப் பிரிய நேரிட்டது. கடும் தாகமும் மன்னனை வாட்டியது. அருகில் ஓர் ஆஸ்ரமத்தைக் கண்டவன், வாயிலில் நின்று குரல் கொடுத்தான். குடிலுக்குள் இருந்து வெளிப்பட்ட ரிஷிபத்தினியிடம், தாகத் துக்கு தண்ணீர் வேண்டினான். அவளோ மன்னனின் அழகில் மெய்ம்மறந்தாள். தன் காதலை மன்னனிடம் தெரிவிக்கவும் செய்தாள். அறத்துக்குப் புறம்பான அவளின் விருப்பத்தை மன்னன் ஏற்கவில்லை. ஆகவே, அவள் அவனை குஷ்டரோகியாகும்படி சபித்தாள்.

சாபவயப்பட்டு காட்டில் அலைந்து திரிந்த ருக்மாங்கதன், ஒருநாள் நாரதரைத் தரிசித்தான். அவரிடம் தனது துயரத்தைக் கூறி வருந்தினான். உடனே நாரதர், ``கலங்காதே மன்னா! இங்கிருந்து சற்று தூரத்தில் சிந்தாமணி விநாயகர், கோயில் கொண்டிருக்கிறார். அருகிலேயே ஒரு திருக்குளம் உள்ளது. அதில் மூழ்கிய குஷ்டரோகி ஒருவன், குணம் பெற்று எழுந்ததை நானே கண்டேன். நீயும் அங்கு சென்று, சிந்தாமணி விநாயகரைத் தரிசித்து, திருக்குளத்திலும் மூழ்கி எழு. உன் நோய் நீங்கும்'' என்று அறிவுறுத்தியதுடன், கெளதம முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன், சிந்தாமணி விநாயகரை வழிபட்டு அருள்பெற்ற கதையையும் எடுத்துரைத்தார்.
ருக்மாங்கதனும் அவர் கூறியபடியே, சிந்தா மணி விநாயகரை வழிபட்டு, திருக்குளத்தில் நீராடி நோய் நீங்கப் பெற்றான். நாமும் சிந்தா மணி விநாயகரின் திருவுருவை வழிபட்டால், நம் சிந்தை மகிழும் இனிமையான வாழ்க்கை வரமாகக் கிடைக்கும்.

Monday, September 5, 2016

பதினாறு பேறுகளும் அருளும் பதினாறு கணபதிகள்!

விநாயகப் பெருமானுடைய திருவடிவம் பக்தர்களின் மனப்பக்குவத்துக்கு ஏற்ப முப்பத்திரண்டு வகைகளாகப் போற்றப்படுகின்றன.

அவற்றுள் பதினாறு வடிவங்கள், விநாயகரின் ஷோடச வடிவங்கள் என்று போற்றப்படுகின்றன.

இந்த பதினாறு திருவடிவங்களையும் மனதில் தியானித்து, ஒவ்வொரு வடிவத்தின் பெயரையும் ஜபித்து ஆனைமுகனை தினமும் ஆராதித்து வந்தால், அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

ஓம் பக்தி கணபதியே போற்றி!

முழு நிலா போன்ற வெண்ணிற மேனியர். தம்முடைய நான்கு திருக் கரங்களில் தேங்காய், மாம்பழம், வாழைப் பழம், அமிர்த கலசம் (பாயச பாத்திரம் என்றும் சொல்வர்) வைத்திருப்பார்.
இவரை வழிபட்டால், வீட்டில் அன்னம் செழிக்கும்.


ஓம் த்விஜ கணபதியே போற்றி!

நான்கு முகங்களை உடையவர். சந்திரன் போன்று பிரகாசிப்பவர். நான்கு திருக் கரங்களிலும் முறையே சுவடி, அட்ச மாலை, தண்டம், கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவர். கைகளில் மின்னல் கொடிபோன்ற வளையல்களை உடைய இவரை வழிபட்டால், தீவினைகள் நீங்கும்.


ஓம் திரயட்சர கணபதியே போற்றி!

இவர் பொன்னிற மேனி உடையவர். அசைகின்ற செவிகளை உடையவர். நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி இருப்பவர். தும்பிக்கையில் மோதகம் திகழும். இந்தத் திருவுருவை தியானித்து வழிபட, கலைஞானம் ஸித்திக்கும்.


ஓம் ஊர்த்துவ கணபதியே போற்றி!

பொன்னிறம் வாய்ந்தவர்.கரங்களில் நீல மலர், நெற்பயிர், தாமரை, கரும்பு, வில், பாணம், தந்தம் ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். பச்சை நிறத் திருமேனி உடைய தேவியைத் தழுவியவாறு காட்சி தரும் இவரை வழிபட்டால், இல்லறம் நல்லறமாகும்.


ஓம் ஏகதந்த கணபதியே போற்றி!

நீலநிறத் திருமேனியும் பேழை வயிறும் கொண்டவர். கோடரி, அட்சமாலை, லட்டு, தந்தம் ஆகியவற்றை தம்முடைய திருக்கரங்களில் ஏந்தி இருப்பார். இவரின் திருவுருவை தியானித்து வழிபட்டு வந்தால், முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த பாவங்கள் விலகும்.


ஓம் ஏகாட்சர கணபதியே போற்றி!

செந்நிறத் திருமேனி உடையவர். செந்நிறப் பட்டு அணிந்தவர். குறுகிய கால்களும் குறுகிய கைகளும் உடையவர். அபய வரத ஹஸ்தங் களுடன் மேலிரு திருக் கரங்களில் பாசமும் அங்குசமும், தும்பிக்கையில் மாதுளம்பழமும் கொண்டு திருக்காட்சி தருபவர். இவரை வழிபட்டால், தோஷங்கள் நீங்கும்.


ஓம் ஹரித்ரா கணபதியே போற்றி!

மஞ்சள் நிறத் திருமேனி உடையவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். பக்தர்களுக்கு உடனுக்குடன் அபயம் அளிப்பவர். இவரை வழிபட்டால், நம்மைச் சூழும் பேராபத்துகளும் சூரியனைக் கண்ட பனி போன்று விலகும்.


ஓம் ஹேரம்ப கணபதியே போற்றி!

ஐந்து திருமுகங்கள் கொண்டவர். இரண்டு கரங்களில் அபய- வரத ஹஸ்தமும், மற்ற திருக் கரங்களில் பாசம், தந்தம், அட்சமாலை, மலர்க் கொத்து, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார். இவரின் திருவுருவை தியானித்து வழிபட்டால், சத்ரு பயம் நீங்கும்.


ஓம் லட்சுமி கணபதியே போற்றி!

பாற்கடல் போன்ற வெண்மை நிற மேனி உடையவர். தமது எட்டு திருக்கரங்களிலும் கிளி, மாதுளை, கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்கம் ஏந்தியும், வரத ஹஸ்தம் காட்டியும் திகழ்வார். மடியில் தேவியரை அமர்த்தியபடி அருளும் இவரை வழிபட்டால், வறுமைகள் நீங்கும்.


ஓம் மகா கணபதியே போற்றி!

முக்கண்ணனாக பிறை சூடி திகழ்பவர். கரங்களில் மாதுளை, கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பல புஷ்பம், நெற்கதிர், தந்தம், ரத்னக் கலசம் ஆகியவற்றுடனும், மடியில் அமர்ந்திருக்கும் தேவியை அணைத்த நிலையிலும் திகழும் இவரை வழிபட, மனச் சலனங்கள் விலகும்.


ஓம் நிருத்த கணபதியே போற்றி!

இவரை கூத்தாடும் பிள்ளையார் என்றும் அழைப்பர். கற்பக விருட்சத்தின் அடியில் எழுந்தருளி இருப்பவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் போன்றவற்றை ஏந்தி இருப்பவர். பொன்னிறத் திருமேனியரான இவரை வழிபட, தீயவை நீங்கி நல்லவை நாடிவரும்.


ஓம் க்ஷிப்ர பிரசாத கணபதியே போற்றீ

பேழை வயிறு உடையவர். ஆபரணங்கள் தரித்த திருமேனி கொண்டவர். பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளை, தாமரை, தர்ப்பை ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். இவருடைய திருவுருவைத் தியானித்து வழிபட்டால், வாழ்க்கையில் தடைகள் நீங்கும்; நற்காரியங்கள் நடந்தேறும். 


ஓம் சிருஷ்டி கணபதியே போற்றி!

சிவந்த திருமேனியர். பெருச்சாளி வாகனத்தை கொண்டவர். தம்முடைய திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். இவருடைய திருவுருவை மனதில் தியானித்து, அனுதினமும் வழிபட்டு வந்தால், கலை படைப்புகளில் வெற்றி பெறலாம்.


ஓம் விஜய கணபதியே போற்றி!

செந்நிற மேனி கொண்டவர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவர், தம் திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தியிப்பவர். இந்தப் பிள்ளையாரின் திருவுருவை தியானித்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.


ஓம் தருண கணபதியே போற்றி!

சிவந்த நிறமும், எட்டு திருக்கரங்களும் கொண்டவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தந்தம், நெற்கதிர், கரும்புத் துண்டு ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். இவருடைய திருவுருவை தியானித்து வழிபட்டால், நம் சந்ததி செழிப்புற்று திகழும்.


ஓம் உச்சிஷ்ட கணபதியே போற்றி !

நீலநிறத் திருமேனியராக, இரண்டு கரங்களில் நீலோற்பல மலரும், மற்ற கரங்களில் மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். இவருடைய திருவுருவை தியானித்து வழிபட்டு வந்தால்,  மனவாட்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.

கணபதியே வருவாய்... அருள்வாய்!

விநாயகர் தனக்குத் தலைவர் தானேயாக விளங்குபவர். அவருக்கு மேல் வேறு தலைவர் இல்லை. தேவர்கள் யாருக்குமே இத்தனை ஆற்றல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அபரிமிதமான ஆற்றல் கொண்டவர் விநாயகர். அகிலம் அனைத்தையும் தனது வயிற்றுக்குள் அடக்கி, வெளியிலிருந்து எந்த இடையூறும் நெருங்காதவாறு காக்கும் கருணைக் கடவுள் கணபதி. எத்தனை படைகள் ஒருசேரத் திரண்டு வந்தாலும், அத்தனை படைகளையும் சம்ஹாரம் செய்து, பக்தர்களைக் காப்பாற்றுபவர் அவர்.
கணங்களுக்கெல்லாம் பதியாக இருப்பவர் கணபதி. பிரகிருதி தத்துவம், சுத்தவித்யா தத்துவம், ஈசுவர தத்துவம் ஆகிய மூன்று தத்துவங்களிலும் விளங்கும் விநாயகர், பிரகிருதி, தெய்வம், பரஞானம் ஆகிய மூன்று நிலைகளிலும் தோற்றம் தருபவர்.
தூய அன்போடு பூவும் நீரும் கொண்டு அவரை பூஜிக்கும் அன்பர்களுக்கு நிகரற்ற இன்ப வாழ்வை அருள்பவர். தன் அடியவர்களுக்குப் பிற உயிர்களாலும், மற்ற தெய்வங்களாலும், ஏன்... தன்னாலும்கூட எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் காப்பாற்றுபவர்.
யானையைப் போலவே தன்னைக் கட்டுவதற்கு, அன்பாகிய கயிற்றை அடியார்களுக்குத் தானே எடுத்துக் கொடுத்து, அவர்களின் உள்ளமாகிய கூடத்தில், ஊக்கமாகிய கட்டுத்தறியில் கட்டுண்டு நிற்பவர். பாகனின் அன்பான கட்டளைக்கு இணங்கி நடக்கும் யானையைப் போலவே, அடியார்கள் பக்தியுடன் கண்ணீர் மல்கத் துதித்துப் போற்றும் பாடல்களுக்கு வசமாகி, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி அருள்பவர்.
சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று ஒளிப்பொருளைக் குறிக்கும் முக்கண்கள், ஐந்தொழில்களை உணர்த்தும் ஐந்து கரங்கள்... என பிரணவ தத்துவமாகவே திகழும் அந்த நாயகனைக் கொண்டாடும் திருநாள்தான் விநாயகர் சதுர்த்தித் திருநாள்.
இந்தப் புண்ணிய தினத்தில் விநாயகரை வழிபடுவதால், நமது வாழ்வு மட்டுமல்ல, நம் சந்ததியினர் வாழ்வும் செழிக்கும்.
வழிபடுவது என்றால், பண்டிகை தினங்களில் ஏதோ சம்பிரதாயமாக தெய்வங்களை வணங்குவதால் பலன் கிட்டாது. குறிப்பிட்ட பண்டிகை உணர்த்தும் தாத்பரியத்தை உணர்ந்து, அந்த பண்டிகைக்கு உரிய தெய்வத்தின் மகிமையை அறிந்து, உரிய துதிப்பாடல்களைப் பாடி உளமார வழிபட்டால், அதற்கான பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.
அவ்வகையில் விநாயகர் சதுர்த்தியின் மகிமையோடு, பிள்ளையாரின் லீலைகள், பதினாறு பேறுகளையும் பெற்றுத் தரும் அவரின் திருவடிவங்கள், பிள்ளையார் விரதங்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

Wednesday, July 20, 2016

இந்து மதத்தை பற்றிய சில அற்புதமான உண்மைகள்!

இந்து மதத்தை இவர் தான் துவங்கினார், இதன் அடிப்படையில் இருந்து பிறந்தது, இந்து மதத்தின் தோற்றம் இந்த காலத்தில் இருந்து தொடங்கியது என வரலாற்றில் எந்த ஒரு சுவடும் இல்லை. இதற்கான பதில் எங்கும் இல்லை.

இந்து மதம் என்பது மனித இனம் உருவான காலக்கட்டத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் என கருதுகிறார்களே தவிர, அதற்கான சான்றுகள் ஏதும் இல்லை.

பெரிய வரலாறு கொண்டுள்ள இந்து மதத்தில் ஒருவரது பிறப்பில் இருந்து இறப்பு வரை அவர் எப்படி வாழ வேண்டும். எந்த மாதிரியான தீய செயல்களில் ஈடுபட்டால் எப்படிப்பட்ட தண்டனைகள் / பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளன.

தகவல் #1

உலக மக்கள் தொகையில் 13.8 சதவீதத்தினர் இந்து மதத்தை தழுவி உள்ளவர்கள் ஆவார்கள்.

தகவல் #2

இந்து மதத்தை இவர் தான் துவங்கினார், இந்த நாள், இந்த வருடத்தில் தான் ஆரம்பமானது, இந்து மதத்தின் தோற்றம் இங்கிருந்து தான் வந்தது என எதுவுமே கிடையாது.

தகவல் #3

முற்பகல் செய்யும், பிற்பகல் விளைவும் என்ற பழமொழியின் அடிப்படையை இந்து மதம் நம்புகிறது. இதை தான் கர்மா என கூறப்படுகிறது.

ஒருவர் செய்யும் நல்லது, கெட்டது சார்ந்து தான் அவரது முடிவு தீர்மானாம் ஆகிறது என்ற கோட்பாடு இந்து மதத்தில் நம்பப்படுகிறது.

தகவல் #4

இந்து மதத்தில் ஏறத்தாழ 33 மில்லியன் கடவுள் / கடவுள்தன்மை உள்ளவர்களை வணங்குகின்றனர்.

தகவல் #5

மகாபாரதம் வழியாக இந்து மதத்தில் வாழ்க்கையின் தத்துவம் எடுத்துரைக்கப்படுகிறது.

இதில் மொத்தம் 1.8 மில்லியன் வார்த்தைகள் அடங்கியிருக்கின்றன. உலகிலேயே பெரிய கவிதையாக இது கருதப்படுகிறது.

தகவல் #6

பெரும்பாலான இந்து மத மக்கள் இறைச்சி உண்கின்றனர். 30% மக்கள் தான் இறைச்சியை உண்பது இல்லை.

தகவல் #7

உலகிலேயே பெரிய இந்து மத வழிபாட்டு தளமாக விளங்குகிறது அங்கோர் வாட். இதன் மொத்த சுற்றளவு 401 ஏக்கர்கள் ஆகும்.

தகவல் #8

ப்ரயோபவேசா! தாங்கள் பிறந்ததற்கான கடமை / வேலைகள் முடிந்தது எனில், விரதம் இருந்து தற்கொலை மேற்கொள்வது வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது. இதை 'ப்ரயோபவேசா' என அழைக்கின்றனர்.

Thursday, July 14, 2016

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !!

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

Thursday, July 7, 2016

மனிதனும் தெய்வமாகலாம்!

ஜூலை, 8 மாணிக்கவாசகர் குருபூஜை

நமக்கு, 'அ, ஆ' எழுத கற்றுத் தந்தவரே, நம் முதல் குரு; அவரை இன்று வரை, நாம் நினைத்துப் பார்க்கிறோம். கடவுளே குருவாக இருந்து, மனிதருக்கு உபதேசம் செய்கிறார் என்றால் அது, சாதாரண விஷயமா... அந்த மிகப்பெரிய ஆசிரியரே சிவன்; அவரது மாணவர் தான், மாணிக்கவாசகப் பெருமான்.
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர், பாண்டிய மன்னனின் சபையில், அமைச்சராக இருந்தார். மன்னரின் படைக்கு, குதிரை வாங்கும் பணி, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரும் பணத்துடன் கிளம்பிச் சென்ற போது, வழியில் புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறை என்னுமிடத்தில், மந்திர ஒலி கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, குருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். அவரிடம், தன்னை சீடராக ஏற்று உபதேசமளிக்கும்படி வேண்டினார், மாணிக்கவாசகர்.
குருவும் அவருக்கு தீட்சை அளித்தார். சற்று நேரத்தில் குரு மறைந்து போக, 'சிவபெருமானே குருவாக வந்து, தனக்கு உபதேசம் அளித்துள்ளார்...' என புரிந்து, உள்ளம் உருகி பாடினார்; அதுவே, திருவாசகம்.
குதிரை வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை, சிவாலய பணிக்கு செலவிட்டார்.
இதையறிந்த மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தார். பக்தனின் பெருமையை உலகிற்கு உணர்த்த, நரிகளை, பரிகளாக்கி, அதை, மதுரை மன்னனிடம் ஒப்படைத்தார், சிவபெருமான். ஆனால், அன்று இரவில், அக்குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக, மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டித்தான். அப்போது, வைகையில் வெள்ளம் வரச் செய்தார் சிவன்.
ஊருக்குள் வெள்ளம் வந்து விடும் என பயந்த மன்னர், ஆற்றங்கரையை உயர்த்த, வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வரும்படி உத்தரவிட்டார். வந்தி எனும் முதிய சிவ பக்தைக்காக, கூலியாளாக வந்து வேலை செய்தார், சிவபெருமான். ஒரு கட்டத்தில், ஒரு மரத்தடியில் களைத்து தூங்குவது போன்று பாவனை செய்தார், எம்பெருமான். அங்கு வந்த மன்னன், வேலை செய்யாமல் தூங்குபவரைப் பார்த்ததும், அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி, உலகில் உள்ள எல்லா உயிர்களின் மீதும் விழ, வந்திருப்பது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட மன்னர், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டார்.
பக்தருக்காக, கடவுள் அடி வாங்கியுள்ளார் என்றால், அது மாணிக்க வாசகருக்காகத் தான்!
திருப் பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர் கோவிலில், மாணிக்கவாசகருக்கு சன்னிதி உள்ளது. மற்ற கோவில்களில் சிவனுக்கே உற்சவம் நடக்கும். இங்கே மாணிக்கவாசகருக்குத் தான் உற்சவம் நடக்கிறது. இதை, பக்தோற்ஸவம் (பக்தனுக்கு நடத்தும் விழா) என்பர். ஆனி மகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும்.
பக்தியுள்ளவர்களுக்கு சோதனை வருவது இயற்கை; இறைவன் அதிலிருந்து விடுதலை தருவான் என்ற நம்பிக்கையோடு, அதைத் தாங்கும் பக்குவத்தைப் பெற்று விட்டால், இறைநிலையையே அடைந்து விடலாம் என்பதற்கு, மாணிக்கவாசகரின் வரலாறு உதாரணம்.

Monday, July 4, 2016

பாதை மாற்றிய பரம்பொருள்!

இறை சிந்தனையில் ஆழ்ந்துள்ள நன்மக்களின் வார்த்தைக்கு இறைவன் செவி சாய்ப்பான் என்பதை விளக்கும் உண்மை சம்பவம் இது:
ஓர் ஊரில், கலைமகளின் திருவருளை பெற்ற இருவர், இருந்தனர். அவர்களில் ஒருவர், முடவர்; மற்றொருவர், பார்வையற்றவர். பார்வையற்றவர், முடவரை தோளில் சுமந்து போக, தோளில் இருப்பவர், வார்த்தைகளால் வழிகாட்ட, அவர்களின் பயணம் தொடர்ந்தது.
போகுமிடங்களில் எல்லாம், தங்கள் தெய்வீகப் புலமையை வெளிப்படுத்தி, மக்களுக்கு நல்வழிகாட்டி, தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். தங்களுக்கு அங்கஹீனம் இருப்பதை உணராத அளவிற்கு, எப்போதும் தெய்வ சிந்தனையில் மூழ்கியிருந்தனர்.
ஒரு சமயம், திருவாமாத்தூர் சிவபெருமான் ஆணையின்படி, ஈசன் பேரில், 'கலம்பகம்' எனும் நூலில் உள்ள பாடல்களை பாடினர். தகவலறிந்த அரசர், அந்நூலை அரங்கேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். தெய்வீக தன்மை பெற்ற இந்த இரட்டை புலவர்களின் திறமையை அறிந்த அறிஞர்களும், புலவர்களுமாக ஏராளமானோர் கூடினர். அரங்கேற்றம் துவங்கியது; புலவர்கள் இருவரும், மாதைநாதர் வலங்கொள்பம்பை, மேற்கரையில் கோவில்கொண்டார், புரம் சீறிய வெங்கணைக்கே...எனப் பாடினர்.
இதைக் கேட்டதும், அனைவரும் சிரித்தனர்.
காரணம், கோவில், ஆற்றின் கீழ்க்கரையில் இருந்தது. ஆனால், இரட்டைப் புலவர்களோ, ஆற்றின் மேல்கரையில், கோவில் இருப்பதாக பாடினர்.
இதனால், கூட்டத்தில் சலசலப்பு தோன்றி, 'இவர்களா தெய்வ புலவர்கள்...' என, கேலி பேசி, ஏளனம் செய்தனர்.
இரு புலவர்களும், 'யாமும் அறியோம்; அவன் பொய் சொல்லான். இது, தெய்வத்தின் கட்டளைப்படி எழுதப்பட்டது...' என்றனர். அறிஞர்கள் அதை ஏற்கவில்லை. அரசரிடம் கூறி, அரங்கேற்றத்தை நிறுத்தி விட்டனர். 'கலம்பகம்' பாடிய கவிஞர்கள் இருவரும், இறைவனிடம் முறையிட்டு, தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர்.
அன்றிரவு, மழை பொத்துக் கொண்டு ஊற்ற, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விடிந்ததும் பார்த்தால், கோவிலுக்கு இடப்புறமாக ஓடிய நதி, பாதையை மாற்றி, கோவிலுக்கு வலப்புறமாக ஓடியது.
அதன் காரணமாக, ஆற்றின் கீழ்க்கரையில் இருந்த கோவில், ஆற்றின் மேல்பக்கமாக அமைந்து விட்டது. அதாவது, இறைவன் எழுந்தருளிய கோவில், ஆற்றின் மேல்பகுதியில் அமைந்துள்ளது என, புலவர்கள் பாடியது, உண்மையாகி விட்டது.
புலவர்களின் தெய்வீக தன்மையை அனைவரும் பாராட்டினர். அப்புலவர்களோ, 'இது, சிவபெருமானின் அருள்...' என்று, எம்பெருமானின் கருணையை நினைத்து, கண்ணீர் வடித்தனர்.
திருவாமாத்தூர் எனும் அத்திருத்தலத்திலேயே வாழ்ந்து, வீடு பேற்றையும் அடைந்தனர். அமாவாசையன்று, அபிராமி பட்டருக்காக அன்னை, நிலவை வரவழைத்தாள் அல்லவா? அதுபோல, சிவபெருமான், அடியார்களுக்காக ஆற்றின் போக்கையே மாற்றி, அவர்களின் பெருமையை பறை சாற்றிய ஞான பூமி இது!
இரட்டைப் புலவர்கள் பாடிய, அக்கலம்பக நூல் இன்றுமுள்ளது. படித்து, பரம்பொருளின் கருணையை அடையலாம்

Friday, July 1, 2016

எது வந்தாலும் ஏற்போம்!

ஜூலை 1 - கூர்ம ஜெயந்தி

நல்லது, கெட்டது கலந்தது தான், வாழ்க்கை. இந்த இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்பதே, திருமாலின் கூர்மவதார தத்துவம்.
ஒருமுறை, ஐராவதம் என்ற யானை மேல் பவனி வந்தான், இந்திரன். எதிரே வந்த துர்வாச முனிவர், வைகுண்டத்தில் பிரசாதமாக பெற்ற மாலை ஒன்றை, இந்திரனிடம் அளித்தார். அதை வாங்கியவன், அலட்சியமாக யானையின் மத்தகத்தில் வைத்தான். அது, தும்பிக்கையால் மாலையை தூக்கி, காலில் போட்டு மிதித்து விட்டது.
இந்திரனின் இந்த அலட்சிய செயல், முனிவரைக் கோபப்படுத்தவே, 'செல்வச் செருக்கால் தானே இப்படி செய்தாய்; இனி, செல்வ வளமின்றி தேவலோகம் நலிந்து போகட்டும்...' என, சாபமிட்டார். நடுங்கிப் போன இந்திரன், சாப விமோசனம் கேட்டான். 'திருமால் கூர்மவதாரம் (ஆமை வடிவம்) எடுக்கும் காலத்தில், உனக்கு விமோசனம் கிடைக்கும்...' என்றார் துர்வாசர்.
தேவர்கள் வலிமை இழந்ததால், அசுரர்கள் ஆட்டம் போட்டனர். தங்களை பாதுகாக்கும்படி திருமாலை வேண்டினர், தேவர்கள். 'பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் என்னும் மருந்தை பெற்று அருந்தினால், நிலையான வாழ்வு வாழலாம்...' என்ற அவரது ஆலோசனையை ஏற்றனர். ஆனால், இதை அவர்களால் தனியாக செய்ய முடியாது என்பதால், அசுரர்களிடம் நட்பு கொள்வது போல நடித்து, அவர்களையும் உதவிக்கு அழைத்தனர்.
வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடல் கடையப்பட்டது. ஆனால், மத்து கடலின் அடியில் புதைந்து கொள்ளவே, தேவ, அசுரர்களால் கடலை கடைய முடியவில்லை. உடனே, திருமாலை பிரார்த்தித்தனர், தேவர்கள். அவர் ஆமை வடிவெடுத்து கடலுக்குள் சென்று, மந்தார மலையாகிய மத்தை, தன் முதுகில் தாங்கிக் கொண்டார். பின், தேவ, அசுரர்கள் எளிதில் கடலைக் கடைந்தனர். அப்போது, வாசுகி பாம்பு, வலி தாளாமல் விஷத்தைக் கக்கவே, இரு தரப்பினரும் மயக்க நிலையை அடைந்தனர்.
இதையறிந்த சிவன், அந்த விஷத்தை எடுத்து விழுங்கினார். அப்போது, விஷத்தின் ஒரு பகுதி கீழே சிதறியது. அந்த சிதறலில் இருந்து பாம்புகள், தேள்கள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளும், விஷச்செடி மற்றும் கொடிகளும் தோன்றின. தொடர்ந்து அனைவரும் கடலைக் கடையவே, திருமாலின் அம்சமான தன்வந்திரி, அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அவரைத் தொடர்ந்து லட்சுமி தாயார் வெளிவந்தாள். இந்திரனும் இழந்த செல்வத்தை அடைந்தான்.
ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது வரும் கஷ்டங்களே விஷப்பூச்சிகளும், விஷச்செடிகளும்! அதிலிருந்து கிடைக்கும் நன்மையே அமிர்தம். கஷ்டங்களைப் பெரிதுபடுத்தாமல், எது வந்தாலும் ஏற்போம் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டால், திருமாலின் திருவருளைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்!

Saturday, May 21, 2016

பூதம் காட்டிய புண்ணியவழி

இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து, 'பச்... சாமியாவது ஒண்ணாவது...' என்று சலித்துக் கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து, 'ஜோசியமே பொய்...' என்று புலம்புவது, பொழுதை எல்லாம் வீணாகப் போக்கி, 'நமக்கெல்லாம் எங்கே நல்ல காலம் வரப் போகுது...' என்று, விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின் இயல்பு.
சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக வாழ ஆசைப்படுகிறோம்.
கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும்.
எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ. தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின், மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர் வழக்கம்.
இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள், ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி, 'ராம பக்தா... குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும், என் தாகம் தீரவில்லை; இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால், என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது. என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்...' என்றது.
'ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்...' என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.
பூதமோ, 'அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடைபெறுகிறது; அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார், மாருதி. அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்...' என்று சொல்லி மறைந்தது.
ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல் ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக வெளியேறுவார் ஆஞ்சநேயர்.
பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ, முதியவர் வடிவில் அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து, அவர் அருகில் அமர்ந்தார். ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.
தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ. வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன், முதியவரும் வெளியேறத் துவங்கினார். கூடவே, ராம்போலோவும் புறப்பட்டார். விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார். சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார், ராம்போலோ. உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது. அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.
கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய வடிவத்தை காண்பித்து, 'ராம்போலோ... உன் விடாமுயற்சியும், தீவிர பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன; வேண்டியதைக் கேள்...' என்றார்.
'அஞ்சனை மைந்தா... அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்படுகிறேன்...' என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு தரிசனம் தந்து, 'பக்தா... என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்...' என்று ஆசி கூறி, மறைந்தார்.
ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான அந்நூல், 'ராம் சரிதமானஸ்' எனப்பட்டது. இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர்!
விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக வந்து தரிசனம் அளிக்கும்.

Friday, May 20, 2016

சிங்கமுக கடவுள்!

மே, 20 நரசிம்மர் ஜெயந்தி

வலது காலை மடித்து அமர்ந்துள்ள தெய்வங்களுக்கு சக்தி அதிகம்; சில அம்மன் கோவில்களில், இந்த தரிசனத்தைக் காண முடியும். நரசிம்ம விக்ரகங்கள் பெரும்பாலும் இடது காலை மடித்து, அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில், வலது காலை மடித்து அமர்ந்து அருள்பாலிக்கிறார், நரசிம்மர்.
நரசிம்மர் என்ற சொல்லிலுள்ள, நரன் என்பது மனிதனையும், சிம்மம் என்பது சிங்கத்தையும் குறிக்கும். இவர் மனித உடலும், சிங்க முகமும் கொண்டவர். அசுர குணங்களுடன் நடப்பவர்களை அடக்க தெய்வம் நினைத்து விட்டால், அதன் உக்கிரத்தை தாங்க இயலாது என்பதை நரசிம்ம அவதாரம் எடுத்துரைக்கிறது. அதே நேரம், தெய்வத்தின் மீது பக்தி செலுத்தினால், சாந்தமாக, லட்சுமி நரசிம்மராய் மாறி, வேண்டியதை அள்ளித் தருவார்.
நரசிம்மரின் தரிசனம் வேண்டி, இத்தலத்தில் கடும் தவம் இருந்தார், ஜாபாலி மகரிஷி. இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், பிரதோஷ வேளையில், மகரிஷிக்கு தரிசனம் தந்தார்.
இதன் அடிப்படையில், இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். மூலவரை, பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைப்பர். 'பாடலம்' என்றால், சிவப்பு; 'அத்ரி' என்றால், மலை. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்ததால், இவ்வூருக்கு, பாடலாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.
நரசிம்மருக்கு ஆயுதம் அவரது நகங்கள் தான். இதைக் கொண்டே அவர் இரண்யனை வதம் செய்தார். ஆனால், இங்குள்ள நரசிம்மர், பெருமாளின் அம்சமாக சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். அது மட்டுமல்லாமல், இவருக்கு கண்கள் மூன்று; உற்சவர், பிரகலாத வரதன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் அருளுகிறார்.
இங்குள்ள நரசிம்மர், குகையில் இருப்பதால், அச்சிறிய குன்றினையும் சேர்த்தே வலம் வர வேண்டும். லட்சுமியின் அம்சமான தாயார் அஹோபிலவல்லியை, செல்வ வளம் வேண்டி வணங்குவர். இங்கு, 12 ஆழ்வார்களும் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்.
வைகாசி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர், நரசிம்மர். அன்று, அவரது ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பவுர்ணமியன்று கிரிவலம் நடக்கிறது; மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில், அவரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. செவ்வாய், ராகு தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை விலக, இங்கு சிறப்பு பூஜை செய்கின்றனர். சனி திசை, ஏழரை மற்றும் அஷ்டமச்சனியால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள், இவரை வணங்கி வரலாம்.
சென்னையிலிருந்து செங்கல்பட்டு-செல்லும் வழியில், 8 கி.மீ., முன் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது.
தொலைபேசி: 044-2746 4325.

Monday, May 16, 2016

பன்னிரு வரங்கள்... பன்னிருகை வேலவனின் பன்னிரு தலங்கள்!

ரிது அரிது மானிடர் ஆதல் அரிது’  என்றும், ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்றும் மனிதப் பிறவியின் உயர்வை சிறப்பாகப் போற்றியுள்ளார்கள் அருளாளர்கள். காரணம், பிறப்புகளில் தலையாயது மனிதப் பிறப்பே!

படைப்பில், வேறு எந்த உயிரினத்துக்கும் கிடைக்காத சிந்திக்கும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. எனவே சிந்திக்கத் தெரிந்த மனிதன், தன் பகுத்தறிவைக் கொண்டு தமது வாழ்வை தெய்வ சிந்தனையில் செலுத்தி, அதன் மூலம் இறையருளைப் பெறலாம். வாழ்வை அன்பு மயமாக ஆக்குவது இறையருட் சிந்தனையால் எளிதில் இயலும். அதுவே பிறப்பின் பயனாகும்.

இன்றைக்கு, அறிவியலில் மக்கள் வெகுவாக முன்னேறினாலும், வாழ்க்கையில் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். மனித குலத்தின் சிரமங்களையும், துன்பங்களையும், வருத்தங்களையும் நீக்க காலந்தோறும் அருளாளர்கள் பலரும் தோன்றி நமக்கு வழிகாட்டி வருகிறார்கள். அவர்கள் அருளிய பக்தி இலக்கியங்கள் யாவும் நமது வாழ்வைச் செம்மைப்படுத்த வந்தவையே.

அவற்றைப் படித்து பாராயணம் செய்து மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும், நெறியுடனும் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். நோய்க்குத் தக்கவாறு மருத்துவர் மருந்து கொடுத்து நோயைத் தீர்ப்பது போல, தம்முடைய தேவைக்குத் தக்கபடி பிரார்த்தனை செய்து கொள்ள வசதியாக பக்தி இலக்கியங்களை அருமருந்தாகப் பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் முருக வழிபாட்டுக்கு ஒரு பேரிலக் கியத்தைப் படைத்தவர் அருணகிரிநாத சுவாமிகள். அவர் தலம்தோறும் சென்று பாடிய திருப்புகழ்ப் பாடல்களில் மனிதனுக்குத் தேவையான வாழ்வியல் நெறிகள் அனைத்தும் உள்ளன. முருகனின் திருவருளால், மனித வாழ்வில் பல்வேறு நிலைகளில் அவனுக்கு ஏற்படும் தேவைகள், விருப்பங்கள் என அனைத்தும் நிறைவேறுவதற்கு, திருப்புகழ் எனும் மாமருந்து பயன்படுகிறது என்பது பலரது அனுபவ உண்மை.

சென்ற நூற்றாண்டில் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் முதலாக திருப்புகழ் அடியார்கள் பலரும் ஓதி உணர்ந்து, அன்பர்கள் யாவருக்கும் போதித்து, எல்லோரும் இன்புறும் வகையில் போற்றிக்கொண்டாடப்பட்ட ‘திருப்புகழ்’ எனும் இந்த அருட்செல்வத்தை, நீங்களும் பெற்று பயனுறும் வகையிலானது இந்தத் தொகுப்பு. இதன் மூலம் மஹா மந்திரமான திருப்புகழை ஓதி, திருத்தல வழிபாடு செய்து, திருமுருகன் திருவருளால் சகல செல்வயோகம் மிக்க பெருவாழ்வு பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகிறோம்.


திருமண வரம் அருளும் திருச்செந்தூர்

‘கயிலை மலை அனைய செந்திற்பதி’ என்று அருணகிரிநாத சுவாமிகள் வியந்து புகழ்ந்து போற்றும் ஒப்பற்ற தலம் திருச்செந்தூர். திரு முருகாற்றுப்படையில் நக்கீரர் ஆற்றுப்படுத்திய பதிகளில் இரண்டாவது தலம். சிந்து என்றால் கடல். எனவே சிந்துபுரம், சிந்து தேசம், செந்தில், திருச்செந்தூர் என அழைக்கப்படுகிறது. சிறப்புமிக்க அலைகள் முருகனின் திருவடி யில் வந்து வருடுவதால் ‘திருச் சீரலைவாய்’ எனவும், சூரபத்மனை வெற்றி கொண்ட இடமாதலால் ‘ஜயந்திபுரம்’ எனவும் அழைப்பர்.

செந்திலின் உறையும் கந்தன் ஒரு முகம் - நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் ஷண்முகப் பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி, தேவசேனை சமேதராக தெற்கு நோக்கி அருள்கிறார்.

புறத்தே அலை ஓயும் இடத்தில் செந்தூர் முருகன் கோயில் கொண்டுள்ளதுபோல், அகத்தே எங்கு எப்போது மன அலை ஓய்கின்றதோ, அங்கு அப்போது ஜோதி முருகன் கோயில் கொள்வான். எனவே, மனத்தால் வழிபட வேண்டிய தலம் திருச்செந்தூர் என்பார் அருணகிரிநாத சுவாமிகள். திருச்செந்தூர் முருகன் மீது 84 திருப்புகழ்ப் பாடல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைகண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணம்நாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நான்என்று மார்தட்டும் பெருமாளே.


ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி அமைவதும், ஒரு பெண்ணுக்கு உயர்ந்த கணவன் அமைவதும் இறைவன் திருவருளேயாகும். எனவே முருகப்பெருமானை திருப்புகழால் போற்றி வழிபட்டு இனிய இல்லற வாழ்வு அமைய வழி காட்டுகிறார் அருணகிரியார். திருச்செந்தூர் திருப்புகழ் ஒன்றில் வள்ளியம்மைக்கு திருமண மாலை தந்து குறையைத் தீர்த்தது போல் தனக்கும் (இந்த ஜீவாத்மாவுக்கும்) மாலை தந்து குறையை நீக்க வேண்டும் என்று வேண்டுகிறார். ‘இத்திருப்புகழ் அடியார்களின் இடுக்கண் நீக்கும் மந்திரத்திருப்புகழ்’ என்று குகத்திரு வாரியார் சுவாமிகள் குறிப்பிடுவார்

செந்தூர் முருகனைத் தரிசிப்பதுடன், மேற்காணும் திருப்புகழ் பாடலை அனுதினமும் பாடி அவரை வழிபட்டால், மணமாலை விரைவில் தோள்சேரும்.


பிள்ளை வரம் அருளும்  சுவாமி மலை

இனிய இல்லற வாழ்வில் இறைவன் திருவருளால்தான் மகப்பேறு வாய்க்கும்.

அருணகிரியார் திருப்புகழில் பாடிப் போற்றிய எந்தத் தலத்திலும் அன்றி, திருவேரகம் என்னும் இந்த சுவாமிமலையில் அருள்பாலிக்கும் சுவாமிநாதப் பெருமானிடம் ஒரு பிரார்த்தனை வைக்கிறார். என்ன தெரியுமா?

‘முருகப் பெருமானே ஓர் குழந்தை வடிவில் பத்து மாதம் மனையாளின் கர்ப்பத்தில் வந்து பிறந்து உச்சி மோந்து கொஞ்ச வேண்டும். தோளில் உறவாடியும், மடியில் விளையாடியும், மணிவாயால் முத்தம் கொடுக்க வேண்டும்’ என்று வேண்டுகிறார் அருணகிரியார்.

‘‘ஏரக வெற்பெனும் அற்புதமிக்க சுவாமிமலைப் பதி” என்று தீர்மானமாக அருணகிரியார் போற்றும் இத்தலம் மலையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் கட்டு மலையில் உருவான கவின்மிகு திருக்கோயில். இங்குதான், ‘திரு எழுகூற்றிருக்கை’ என்னும் சித்ரகவியை பாடியுள்ளார் அருணகிரி. சுவாமிமலையில் உள்ள குருபரன் பதினாறு உலகத்தினில் உள்ள பக்தர்கள் எதை நினைத்தாலும் அதனை முழுதும் அளித்து அருள்பவன் என்கிறார். தனக்கு திருவடிகாட்டி அருளிய ஒப்பற்ற முருகன் என்றும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் சுவாமிமலை என்ற பெயரில் அமைந்த பழைமையான திருத்தலம் இது ஒன்றுதான். ‘ஸ்வாமி’ என்பது முருகனுக்கே உரிய திருப்பெயர் என்பதை அமரகோசம் என்னும் நிகண்டு குறிப்பிடுகிறது. ‘ஸ்வயம்’ என்றால் எல்லாவற்றையும் தன்னகத்தே உடையவர் என்று பொருள்.


ஜெகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி
மகவாவின் உச்சி விழிஆன னத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி
மடிமீ தடுத்து விளையாடி நித்தம்
மணிவாயின் முத்தி தரவேணும்


இந்த ஞானபண்டிதனிடம் ‘ஞானப் புதல்வனைப்’ பெற்று இன்புறலாம் அல்லவா? அதுமட்டுமா! அவனிடம் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வும். சிவஞான முத்தியும் வேண்டிப் பெறலாம். அதற்கு மேற்காணும் திருப்புகழ் பாடல் உங்களுக்கு உதவும்.


ஆரோக்கியம் அருளும் பழநி மலை

மனிதப் பிறவி அரிதானது. அதிலும் ‘கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்பது ஒளவையின் வாக்கு. இதுபோன்ற உடற்குறைகள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி மனத்தை வருத்தும். இதற்கு முற்பிறவியின் வினைப் பயன் முக்கிய காரணம் என்றாலும், இப்பிறவியில் இதனை நீக்க வழியைக் காட்டுகிறார் கருணை முனிவர் அருணகிரி. முருகனை வழிபடுவோர் மனத்தாலும் உடலாலும் அவனைப் போன்றே அழகாக இருப்பர். பழநித் திருப்புகழ் ஒன்று இதற்குப் பாங்கான வழிகாட்டுகிறது.

முருகப் பெருமான் விரும்பி உறையும் மலைத்தலங்களில் புகழ் பெற்றது பழநிமலை. அடிவாரத்தில் திரு ஆவினன்குடி கோயிலும் மலைமீது பழநி ஆண்டவர் திருக்கோயிலும் அமைந்துள்ளன.

சிவபெருமானும் உமையம்மையும் ‘பழம் நீ’ என முருகனை அழைத்ததால் இத்தலம் பழநி என்றும், இங்கு முருகன் ஞானப்பழமாக விளங்குகிறான் என்பதும் புராண வரலாறு. மண்ணுலகில் வாழ்வோருக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் இறைவனும் உலகப் பொருள்களில் பற்று அற்றவனாக இருக்கிறான் என்பதையே பழநியாண்டவரின் துறவுக்கோலம் காட்டுகிறது. ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்துக்கள்  பேரொளியாக அமைந்த மலை பழநிமலை என்று சிறப்பிக்கும் அருணகிரியார், வாக்கினால் பழநியை வழிபடவேண்டும் என்று வழிகாட்டுகிறார்.

திருவாவினன்குடி, பழநி இரண்டுக்கும் சேர்த்து அருணகிரியாரின் 100 திருப்புகழ்ப் பாடல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் மேற்காணும் பாடல், உடற்குறை நீங்கி வறுமை அணுகாமல் தேவர்கள் வடிவுடன் அறிவு, நீதி, ஒழுக்கத்துடன் வாழ பழநி முருகனை வேண்டிப் பரவும் அற்புதத் திருப்புகழ் பாடல் இது.

இப்பாடலைப் பாடி பழநி முருகனை வழிபட்டால் ஊனம் இல்லாமல், ஆரோக்கியத்துடன் குழந்தைகள் பிறக்க வரம் கிடைக்கும். ஊனங்களை ஏற்படுத்தும் விபத்துகளும் விலகும்.


திமிர உததி அனைய நரக
ஜெனனம் அதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவும் நிறைவும் வரவேநின்
அருள தருளி எனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும்


நினைத்ததை நிறைவேற்றும் திருவக்கரை

‘‘வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ” என்பார் மணிவாசகர். இறைவன் அடியார்கள் வேண்டியவை அனைத்தும் அருளும் வள்ளல்.

முருகப் பெருமான் அடியார்க்கு எளியன், அடியவர்களுக்கு அவர்கள் வேண்டும் அரிய பொருளை வேண்டும் அளவுக்கு வழங்கி உதவும் பெருமான், யார் வேண்டினாலும் கேட்ட பொருளை ஈயும் தியாகாங்கசீலன், அடியார்கள் கோடி முறை குறைகூறினாலும் கோபம் கொள்ளாமல் அருள்புரியும் தேவதேவன் என்றெல்லாம் கந்தவேளின் பெருங்கருணையை வியந்து போற்றுவார் அருணைமுனிவர். அழகு திருத்தணியில் உறையும் முத்தமிழிற் பெரியவன் நினைத்தவை எல்லாம் தவறாமல் அருள்பவன் என்று ஒரு பாடலில் (நினைத்ததெத்தனையில் தவறாமல்) குறிப்பிடுவார். இவை மட்டுமா? திருவக்கரை முருகனைப் பாடும்போது,  ‘‘அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாள்” என்று புகழ்கிறார். அடியார் களின் மனத்தில் உள்ள ஆசைகள் அத்தனையும் பூர்த்தி செய்யும்  கருணை மூர்த்தி அவன் என்கிறார்.

திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் உள்ளது திருவக்கரை. இங்கே, இறைவி வடிவாம்பிகை சமேதராக அருள்மிகு  சந்திரசேகரர் அருளும் சிவாலயத்தில், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார் ஆறுமுகப் பெருமான். இருபுறமும் தேவியர். வக்ரன் என்ற அசுரன் பூசித்ததால் வக்கரை என்று பெயர். மூலவர் மூன்று முகலிங்கம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் கல்லுருவாக உள்ளன. திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். வக்ரகாளியம்மன் சந்நிதி சிறப்புடையது.


குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை உறைவோனே
அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன
அவைதரு வித்தருள் பெருமாளே


இந்தத் தலத்துக்குச் சென்று முருகப்பெருமானைத் தரிசித்து, மேற்காணும் திருப்புகழ் பாடலைப்பாடி, உள்ளம் உருக அவரை வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் விரைவில் நிறைவேறும்.


மனக்கவலை தீர்க்கும் சிதம்பரம்

இன்றைய உலகில் பெரும்பாலான மக்களுக்குத் தீராத பிரச்னையாக உள்ளது மனக்கவலை மற்றும் மன இறுக்கமாகும். இவற்றுக்குப் பல காரணங்கள் உண்டு.

தேவைக்கு மேல் ஆசை, நிறைவேறாத ஆசை, வரவுக்கு மேல் செலவு, கடன் தொல்லை இப்படி ஒவ்வொன்றாலும் கவலை அதிகரிக்கின்றது. எல்லாவற்றிலும் போதும் என்ற மனத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமான காரணமாகும். வீட்டிலும் சரி, பணி இடங்களிலும் சரி, அதீத கவலையினால் கலங்கி நிற்கிறது மனித குலம். இதற்குப் பரிகாரம்தான் என்ன? இறை வழிபாடும், தியானமும், பாராயணமும்தான் கவலைகளை நீக்கி மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். அதற்கு அருணகிரியார், சிதம்பரம் கோயிலில் அருளும் முருகப்பெருமானைப் போற்றி, தான் பாடிய திருப்புகழில் வழிகாட்டுகிறார்; ‘வாராய்! மனக்கவலை தீராய்!’ என வடிவேலனை அழைக்கிறார்.

சைவர்களுக்குக் கோயில் என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான் குறிக்கும். பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாயத்தலம். தினமும் ஆறுகால பூஜையும் ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜருக்கு விசேஷ அபிஷேக வழிபாடும் நடைபெறும் கோயில். இந்தத் தலத்தில் ஆறுமுகப்பரமனை அருணை முனிவர் போற்றிப் பாடிய திருப்புகழ்ப்பாடல் ஒன்று மனக்கவலை தீர மருந்தாக அமைந்த மந்திரமாகும்.

மற்றொரு தலமும் உண்டு. சைவத் திருமுறைகளில் ‘இடர்களையும் பதிகம்’ என்று சிறப்பாக குறிப்பிடப் பெறும் பதிகம் பெற்ற திருத்தலம் திரு நெடுங்களம். இது திருச்சி - துவாகுடி அருகில் உள்ளது. திருஞான சம்பந்தர் இத்தல இறைவனை போற்றிப் பரவிய ‘மறையுடையாய்’ என்று தொடங்கும் பதிகம் போல், அருணை வள்ளலும் இத்தல முருகனை ‘‘என் மனக் கவலையைத் தீர்த்தருள்க’’ என்று வேண்டுகிறார். இரண்டு தலங்களுக்கும் சென்று தரிசித்து, மனக் கவலைகள் நீங்க வரம்பெற்று வரலாம்.

நாடா பிறப்புமுடி யாதோ எனக்கருதி
நாயேன் அரற்று மொழி வினையாயின்
நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என
நாலா வகைக்கும் உன தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தா தா எனக்குழறி
வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர
வாராய்  மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரேன் எனக்கெதிர் முன் வரவேணும்.


வறுமையை விரட்டும் திருவண்ணாமலை

‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்றார் ஔவை மூதாட்டி. மனிதனுக்கு வறுமை (மிடி) என்னும் தரித்திர நிலை வந்துவிட்டால் அவனது மானம், மரியாதை, குலப்பெருமை முதலிய அனைத்தும் நீங்கி, இழிந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இந்த வறுமை நிலை நீங்க வழிகாட்டுகிறார் அருணகிரியார். ‘‘கடையவனாகிய என்னுடைய வறுமை ஒழியவும், நோய் நீங்கவும் கனல் மால் வரை (அக்னிப்பெருமலை) கந்தப் பெருமான் - திருவண்ணாமலை ஆறுமுகப் பெருமானிடம் வேண்டுகிறார்.

‘அருணையை நினைக்க முத்தி’ என்பது ஆன்றோர் முதுமொழி. ஆறு ஆதாரங்களில் இது மணிபூரகத்தலம். பஞ்சபூதத் தலங்களில் இது தேயு (அக்னி) நெருப்புத் தலம். மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஆலயம். அடியார்களை ‘வா! வா!’ என்றழைக்கும் மிகப்பெரிய கோபுரங்கள். கிரிவலத்தால் புகழ்பெற்ற கீர்த்தி நிறைந்தது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாம் இறைவன் இங்கே கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் ஜோதி வடிவாகக் காட்சியளித்து உலகை உய்விக்கிறார்.

முருகப்பெருமான் அருணகிரியாரை ஆட்கொண்டு திருவடிக்காட்சி நல்கி ‘முத்தைத்தரு...’ என்று அடியெடுத்துக் கொடுத்து திருப்புகழ் பாட வைத்த திருத்தலம் இதுதான். மஹா சிவராத்திரியின் தோற்றுவாய் கொண்டதும், தேவிக்கு ‘இடப்பாகம்’ அளித்ததும் இத்தலச்சிறப்பாகும். இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 அன்று திருப்புகழ்த் திருவிழா இனிது நடைபெற்று வருகின்றது.
அண்ணாமலைத் தலத்துக்கான திருப்புகழ்ப் பாடல்கள் 79 கிடைத்துள்ளன. அதில் ஒரு பாடல் இந்தப் பக்கத்தில் உள்ளது.


தவலோ கமெலா முறையோ எனவே
தழல் வேல் கொடுபோய் அசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
தவம் வாழ் வுறவே விடுவோனே
கவர் பூவடிவாள் குறமா துடன்மால்
கடனாம் எனவே அணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
கனல் மால் வரைசேர் பெருமாளே


தீராத கடன் சுமையாலும், வறுமையாலும் வாடும் அன்பர்கள், திருவண்ணாமலை சென்று இறை தரிசனம் செய்வதுடன், அனுதினமும் மேற்காணும் பாடலை பாடி, முருகப் பெருமானை உள்ளம் உருக வழிபட்டு வந்தால், வறுமைப்பிணி விலகும்; வீட்டில் செல்வகடாட்சம் செழித்தோங்கும்.


பிணிகள் தீர்க்கும் திருத்தணிகை

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நம் முன்னோர் கண்ட அனுபவ உண்மை. ‘‘மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும்” என்று கதிர்காமக் கந்தனிடம் வேண்டுவார் அருணகிரியார். நோயின்றி வாழ்தல் ஒரு கலை. உடம்பு ஓர் ஒப்பற்ற கருவி. ‘‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேன்” என்பார் திருமூலர். நோய் என்ற சொல்லுக்கு வியாதி என்று பொதுப் பொருள் இருந்தாலும் துன்பம், வருத்தம், குற்றம், அச்சம், துக்கம் எனப், பல பொருள்கள் உண்டு. இதனைப் பிணி என்றும் கூறுவர்.

இறைவன் மந்திரமும், தந்திரமும், மருந்துமாகி தீரா நோய் தீர்த்தருள் புரிகின்றான்.  வாழ்க்கையில் உடல் நலம் பேணும் வகையிலும், மருத்துவ வகையிலும் அவன் குடியிருக்கும் ஆலயங்களே முன்னிற்கின்றன. திருக்கோயில் திருக்குளங்களில் நீராடி இறைவனை பூசித்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றவர்களைப் பற்றித் தல புராணங்கள் விரிவாகப் பேசுகின்றன.

அருணகிரிநாதர், மனிதனுக்குத் தொல்லைகள் பல தந்து உயிரையே போக்கும் நோய்களைப் பட்டியலிட்டு, இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவை என்னை வருத்தக் கூடாது என்று தணிகைக் கந்தனிடம் வேண்டுகிறார். மலைத் தலங்களில் முதன்மையான தணிகாசலத்தை உடலால் சென்று வழிபட வேண்டும் என்றும், திருப்புகழை ஓதிக்கொண்டு திருத்தணிகை மலை ஏறிச் சென்று வழிபடுவோர்க்குப் பிறவி என்னும் நோயே ஒழியும் என்றும் அறிவுறுத்துகிறார்.

‘‘இருமல், உரோகம்... என்று தொடங்கும் திருத்தணிகைத் திருப்புகழ் நோயற்ற வாழ்வு வாழ சிறந்த மந்திரம் போன்றது. இதனைத் தினமும் ஆறு முறையாவது ஓத வேண்டும். ஆண்டுக்கு ஒரு நாளாவது தணிகை வேலன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும். நோய் வந்தால் இத்திருப்புகழை ஆறுமுறை அன்புடன் ஓதி திருநீறு பூசிக்கொண்டால் நோய் நீங்கிவிடும்’ என்பது வள்ளிமலை சுவாமிகளின் வாக்கு. நாமும் தணிகை வேலவனைத் தரிசித்து, அவனருளால் நோயில்லாப் பெருவாழ்வை பெற்று மகிழ்வோம்.


இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயி றீளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உள நோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன தாள்கள் அருள்வாயே


கல்வியும் புகழும் தரும் திருவிடைக்கழி

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி வாழ்வதுதான் மனிதவாழ்வின் குறிக்கோள் என்று கருவூர் திருப்புகழில் வழிகாட்டுகிறார் அருணகிரியார்.

அவரே, ‘முத்தமிழ் நூல்களின் பொருளை உணர வேண்டும். தவப்பயனை உடைய வாழ்வு பெற வேண்டும். கற்பக விருட்ச தேவலோக வாழ்வு, நல்ல புத்தியுடன் கூடிய அற்புதமான அரச வாழ்வு, உன்னைப் புகழும் திடம், அறிவின் பலம், நாவின் வன்மை ஆகியவற்றையும் தர வேண்டும்’ என்று பெரிய பட்டியலிட்டு வேண்டுகிறார். எங்கே தெரியுமா? திருக்குராவடி என்னும் திருவிடைக்கழி முருகனிடம்.

குராமரம் தலவிருட்சமாக உடைய புண்ணியபூமியில் முருகன் உலவினானாம். இம்மரத்தடியில் முருகன் சிவபூஜை செய்து சூரபத்மனின் மகன் இரண்யாசுரனை வென்றான். காலனை காலால் உதைத்த திருக்கடவூர் தலத்துக்கு அருகில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த அற்புதமான கோயில். இங்கு குராமரத்தடியில் ‘ராகு’ முருகனை பூசித்து அருள் பெற்றான். கருவறையில் கந்தவேளின் பின்புறம் மற்றொரு கருவறையில் பாபநாசப் பெருமான் காட்சியளிப்பது, வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம்.இத்திருக்கோயிலில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேசர் ஆகிய அனைத்து வடிவங்களும் சுப்ரமண்ய சொரூபமாக காட்சியளிப்பது அற்புதம். ஒன்பதாம் திருமுறையில் சேந்தனார் இத்தலத்தில் திருவிசைப்பா பாடியுள்ளதும், அவர் தைப்பூச நன்னாளில் முக்தி பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். தேவசேனைக்கு மட்டும் தனிச் சந்நிதியுள்ள இக்கோயிலில், அவளை மகிழ்விக்கும் பெருமானாக ‘குஞ்சரி ரஞ்சித குமரன்’ எனும் அற்புத வடிவத்தை சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
     பயனு மெப்படிப் பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
     பரவு கற்பகத்  தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
     பொலியும் அற்புதப் பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
     புகழ்ப லத்தினைத்  தரவேணும்


நாமும் திருவிடைக்கழி சென்று அழகன் முருகனைத் தரிசித்து, மேலேயுள்ள திருப்புகழ் பாடலைப் பாடி வழிபட்டு, கல்வி கேள்விகளில் சிறக்கவும், அதன் மூலம் பேரும் புகழும் பெறவும் வரம் வாங்கி வருவோம்.


வீடு வாங்கும் யோகம் அருளும் சிறுவாபுரி

தெய்வச் செந்தமிழ் வெள்ளத்தை சந்தக்கவி அணையால் தேக்கி, சந்ததமும் கந்தவேள் திருவடிகளைத் துதிக்க, இன்பத் திருப்புகழ் அமுதமாக வழங்கிய கருணை வள்ளல் அருணகிரிநாதர் மகிழ்ச்சியுடனும் குளிர்ச்சியுடனும் உயர்ச்சியுடனும் போற்றிய தலம் சிறுவாபுரி. இன்று நமக்குக் கிடைத்துள்ள 1331 திருப்புகழ்ப் பாடல்களில் மகிழ்மீற, மகிழ்கூர, மகிழ்வாக, இன்பமுற மகிழ்கூற என்று நான்குமுறை மகிழ்ச்சியைக் காட்டியுள்ள ஒரே தலப்பாடல் சிறுவாபுரி. அது மட்டுமா ‘தண் தரள மணிமார்பன், தந்தமிழின் மிகுநேயன்; தண் சிறுவை’ என்று குளிர்ச்சி (தண்)யை மூன்றுமுறை பாடியுள்ளதும் இந்த ஒரே பாடலில்தான். எனவேதான் மகிழ்ச்சியும் குளிர்ச்சியும் நிறைந்த சிறுவாபுரி திருப்புகழ் பாடி அத்தலத்தை வழிபட் டால் சொந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற ரகசியத்தை வள்ளி மலை சுவாமிகள் நமக்குக் காட்டியுள் ளார். அடியார்கள் சிந்தையில் குடியேறி அவர்கள் விருப்பம்போல் சொந்த வீட்டிலும் குடியேற வழிசெய்வான் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் அருணை முனிவர். குபேர பட்டணம் போல வளம் நிறைந்த சிறுவையில், வேண்டிய வரத்தை மிகுதியாக அளிக்கும் பெருமானாகத் திகழ்கிறார் முருகன்.

இத்தலத்தை மக்களிடையே 1981-ம் ஆண்டு முதல் அறிமுகப் படுத்திய சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் பிரதிஷ்டை செய்துள்ள ‘வள்ளி மணவாளப் பெருமாள்’ என்னும் கல்யாண முருகன் வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லை. அருணகிரியார் இத்தலத்தில் தாம் கண்ட அருட்காட்சியின் பதிவாக சிறுவாபுரி தலத்தில் பாடியுள்ள ‘அண்டர் பதிகுடியேற...’ என்று தொடங்கும் தலப் பாடலை நூறுமுறை ஒரே நாளில் பாராயணம் செய்த அன்பர் ஒருவருக்கு, மறுநாளே (புதுடெல்லியில்) வீடு கிடைத்ததாம்!  சென்னை - கும்மிடிப்பூண்டி வழியில், சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ.

தொலைவில் உள்ள சிறுவாபுரிக்கு (சின்னம்பேடு), ஒருமுறை சென்று வாருங்கள்; விரைவிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.


அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமு முநிவோரும்  எண்டிசையில்
                         உளபேரும்
     மஞ்சினனும்  அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
     மைந்துமயில் உடனாடி வரவேணும்


சகலமும் அருளும் மதுரை!

தமது திருவடித் தாமரைகளை தினமும் துதித்து வழிபட சந்தத் தமிழை அருணகிரிநாதருக்கு அளித்தார் முருகப்பெருமான். 

செந்தமிழ் சொல் நாலு கவிதைக்காரன், செந்தமிழ் சொல் பாவின் மாலைக்காரன், தண்தமிழின் மிகுநேயன், தமிழ்க்கினிய குருகுமரன், தமிழ்கொடு ஏத்தினார்க்கெளிய பெருமாள்; தெள்ளுதமிழ்ப் பாடல் தெளிவோன்; முத்தமிழை ஆயும் வரிசைக்காரன் என்றெல்லாம் தமிழில் பாடிய பாமாலையை அணிந்து இன்புறும் முருகப் பெருமானை தானும் தலங்கள்தோறும் சென்று பாடினார். அந்த தலங்களில் குறிப்பிடத்தக்கது மதுரை.

தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமையுடையது திரு ஆலவாய் என்னும் மதுரையம்பதி. கடம்பவனம், நான்மாடக்கூடல், பூலோக கயிலாயம் என்னும் பல பெயர்களை உடையது.
மீனாட்சியம்மையுடன் சோமசுந்தரக் கடவுள் அருள்பாலிக்கும் இத்தலத்தில் கூடல் குமரனாக அடியார்க்கு வேண்டும் வரங்களை அருளக் காத்திருக்கிறார் முருகப்பெருமான்.  இவருடைய திருவடியைப் போற்றி மகிழ்கிறார் அருணகிரிநாதர். அத்துடன், இவரை வளமான செந்தமிழால் புகழ்ந்துபாடிட, அதனைக்  கேட்கும் அன்பர்களின் அகம் மகிழும்படியான வரங்களைத் தந்தருள்வாய் என்றும் வேண்டிக் கொள்கிறார் அருணகிரியார்.

மதுரையைப் போலவே நாகப் பட்டினத்தில் அருளும் கந்தனைப் போற்றும் பாடலிலும் அவனது செவ்விய திருவடியைப் போற்றி மகிழ்கிறார். ‘‘இறைவனே! நீ எதைக் கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றாயோ அதைக் கொடுத்தருள்க. உனது திருவடியே எனக்கு உற்ற உறவாகும். அப்படி ஒப்பற்றதும் அழியாததுமான வரத்தைத் தந்தருள்க’’ என்று நாகையம்பதி கந்தப்பெருமானிடம் வேண்டுகிறார். நாமும் இந்த இரு தலங்களுக்கும் சென்று, கந்தனின் திருவடியைப் பணிந்தால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும். 


‘பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய    
பவனி வரும்படி அதனாலே
பகர வளங்களும் நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினில் எங்கணும் உலவி    
        நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி
வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும்
மகிழ வரங்களும் அருள்வாயே


இடையூறுகள் நீங்க குன்றுதோறாடல்

அடியார்களின் இடைஞ்சல்களை - இடையூறுகளை - துன்பங்களை நீக்கி அருள்புரிபவன் அறுமுகப்பரமன். அவரை ‘அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே’ என்று அற்புதமாக அருணகிரியார் போற்றுவார்.

இறைவழிபாட்டுடன் எந்தக் காரியத்தை செய்யத் தொடங்கினாலும் இடையூறுகள் ஏற்படாது என்பது அனுபவ உண்மை. இதன் அடிப்படையில் ‘கந்தவேளை எந்த வேளையும் இதயத்தில் தியானித்து வழிபாடு செய்பவர்களது இடையூறுகள் சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்’ என்று குன்றுதோறாடல் குறித்த திருப்புகழில் வழிகாட்டுகிறார் அருணகிரியார்.

‘குன்றுதோறாடல்’ என்பது பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் சொல். முருகக் கடவுள் மலைக் கடவுள் ஆதலின் ‘மலைகிழவோன்’ ‘கிரிராஜன்’ ‘குறிஞ்சி வேந்தன்’ ‘சேயோன்’ என்றெல்லாம் அழைக்கப்பெறுபவன். பலமலையுடைய பெருமான், மலை யாவையும் மேவிய பெருமான் என்றெல் லாம் போற்றுவார் அருணை முனி.

‘‘உன்னையே தஞ்சம் என்று சரண் புகுவேன்; என்னுடைய உள்ளத்தில் நீ வீற்றிருந்து அருள்கூர்ந்து எனக்கு நேரும் இடையூறுகளும், துன்பங்களும், கலக்கங்களும் அஞ்சி என்னை விட்டு அகல அருள்புரிவாயாக’’ என்று பல குன்றிலும் அமர்ந்த பெருமானைப் பாடி வேண்டுகிறார் அவர்.

அடியார்கள் அவரவருக்கு விருப்பமான மலைத்தலங்களுக்குச் சென்று, அங்கே கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு, இங்கே கொடுக்கப் பட்டுள்ள குன்றுதோறாடல் குறித்த திருப்புகழ் பாடலைப் பாடி வழிபட்டு வரம் பெறலாம்.

எந்தவொரு நற்காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும், இந்தப் பாடலைப்பாடி கந்தனை தியானித்து வழிபட்டுவிட்டுத் துவங்கினால், இடையூறுகள் - தடைகள் யாவும் நீங்கி அந்த நற்காரியம் இனிதே நடந்தேறும்.  அதனால் உண்டாகும் பலன்களும் கந்தன் திருவருளால் இரட்டிப்பாகும்.


அதிரும் கழல் பணிந்துன் அடியேனும்
அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயம்தனில் இருந்து கருபையாகி
இடர்சங் கைகள் கலங்க அருள்வாயே
எதிர்அங் கொருவர் இன்றி நடமாடும்
இறைவன் தனது பங்கில் உமைபாலா
பதிஎங்கிலும் இருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே.


உயர்பதவி யோகம் தரும் ஆண்டார்குப்பம்

ஞானப் பழம் வேண்டி வேழ முகத்தானுடன் போட்டியிட்ட பாலன்... சூரனை வதம் செய்த இளைஞன்... வள்ளிக் குறத்தியை மணமுடிக்க, அவளோடு சதிராடிய கிழவன்... இப்படி, மூன்று (பருவ) கோலத்துடனும் முருகன் தரிசனம் தரும் தலம்- ஆண்டார்குப்பம்!

சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந் துள்ளது. முருகனாகிய ஆண்டவன் அருளும் தலம் என்பதாலும், ஆதியில் ஆண்டிகள் நிறைந்த- அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், அந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படும் ஊர் இது. பிரணவத்துக்குப் பொருள் உரைக்கும்படி, பிரம்ம தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரத் தோரணை யுடன் இடுப்பில் கரம் வைத்து இங்கே காட்சி தருகிறார் முருகப் பெருமான். சம்வர்த்தனர் என்ற அடியவரின் பொருட்டு முருகன் கோயில்கொண்ட தலம் இது.

பிரம்ம தேவனைச் சிறையிலிட்டு அவருடைய அதிகாரத்தைக் கையிலெடுத்த ஆண்டார்குப்பம் முருகன், தம் அடியவர்களுக்கும் அதிகாரம் நிறைந்த பதவிகளை வழங்குவதாக நம்பிக்கை. ‘... தெற்காகு மிப்பாரில் கீர்த்திக் கிசைந்த தச்சூர்  வடக்காகு மார்க்கத் தமர்ந்த பெருமாளே’- என்று அருணகிரியாரும், ‘யாக்கையே பனிப்பென்று...’ எனத் துவங்கி பாம்பன் சுவாமிகளும், ‘திகழாண்டார்குப்பம் திருநகரில் மேவும் தகவுடைய கந்தன் சரணம்’- என்று வாரியாரும், போற்றிப் பாடிய இந்தத் தலத்துக்கு தொடர்ந்து மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் வந்து, நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபட, பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பரணி நட்சத்திர நாளன்று கோயிலுக்கு வந்து, அன்றிரவு அபிஷேக- ஆராதனைகளை தரிசித்து, அங்கேயே தங்கி, மறுநாள் கிருத்திகை வழிபாடுகளையும் தரிசிக்க... சிக்கலான வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.

தச்சா மயில் சேவலாக்கிப் பிளந்த
சித்தா குறப்பாவை தாட்குள் படிந்து
சக்காகி அப்பேடையாட்குப் புகுந்து
        மணமாகித்
தப்பாமல் இப் பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கிசைந்த
தச்சூர் வடக்காகு மார்க்கத்தமர்ந்த பெருமாளே.


இன்னும் சில திருத்தலங்கள்...

சென்னை-பெங்களூர் சாலையில், பாலாற்றின் தென்கரையில் உள்ள புதுவசூர் என்னும் கிராமத்தில் மலைமீது அமைந்திருக்கிறது தீர்த்தகிரி வடிவேல் ஆலயம். இந்தத் தலத்தில்தான் முருகப்பெருமான் ஔவையிடம், ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று சொல்லாடல் நிகழ்த்தியதாகச் சொல்கிறார்கள். அதற்குச் சாட்சியாக மூலவர் சந்நிதிக்கு எதிரில் பெரிய நாவல் மரம் உள்ளது. 500 வருடப் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், கோடையிலும் வற்றாத நீர் ஊற்று ஒன்றும், புனிதக் கிணறு ஒன்றும் உள்ளது. இவற்றின் தீர்த்தம் சகல பிணிகளையும் போக்கும் சக்தி கொண்டது.

ஈரோட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது சென்னிமலை. இங்கே மலைக்குமேல் குடியிருக்கும் முருகனைத் தரிசிக்க படிக்கட்டுப் பாதையும், சாலை வசதியும் உண்டு. மிக அற்புத சக்திகள் நிறைந்த கந்தசஷ்டி கவசம் அரங்கேறியது இங்குதான் என்பர். மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தமும் இந்தத் தலத்தின் சிறப்பம்சம். சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனி உத்திரம்... என திருவிழாக்கள் காணும் சென்னிமலை ஆண்டவனை வழிபட, பொன்னும் பொருளும் செழிக்கும்!

திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, சுப்ரமணிய ஸ்வாமிக்கு ‘கல்யாண உற்சவம்’ நடத்தி வழிபட்டால், திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

திண்டிவனம் அச்சிறுப்பாக்கத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மலையின்மீது அமைந்துள்ளது நடுபழநி முருகன் கோயில். கண்டிகை என்ற ஊரைச் சேர்ந்த முத்துசுவாமி என்ற பக்தருக்குக் கனவில் முருகன் தோன்றி கட்டளை இட்டதால், அவர் காவடி சுமந்து ஊர் ஊராகச் சென்று திருப்புகழ் பாடி, நிதி திரட்டிக் கட்டிய கோயில் இது. இங்கு வருகை புரிந்த காஞ்சி மஹாஸ்வாமிகள், இந்தத் தலத்தை ‘நடுபழநி’ என்று அழைத்துச் சிறப்பித்துள்ளார். இங்குள்ள முருகப்பெருமானை தரிசித்தால் நாகதோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!


தொகுப்பு: ‘வலையப்பேட்டை’ ரா.கிருஷ்ணன்